பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு ரத்தாகிறது? :மதிப்பெண் குளறுபடியால் விசாரணை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 12 December 2017

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு ரத்தாகிறது? :மதிப்பெண் குளறுபடியால் விசாரணை

அரசு பாலிடெக்னிக் தேர்வில், விடைத்தாள் மதிப்பீட்டில் பெரும் குளறுபடி நடந்துள்ளதால், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. அரசு பாலிடெக்னிக்குகளில், விரிவுரையாளர் பணியில், 1,058 காலி இடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அமைப்பு, செப்., 16ல் போட்டி தேர்வை நடத்தியது.
இதில், 1.33 லட்சம் பேர் பங்கேற்றனர்.
தேர்வின் முடிவுகள், நவ., 7ல் வெளியிடப்பட்டன. மதிப்பெண் தரவரிசைப்படி, ஒரு காலியிடத்துக்கு, இரண்டு பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில், இன்ஜினியரிங் இல்லாத பாடப்பிரிவு பணிக்கு, சான்றிதழ்சரிபார்ப்பும் அறிவிக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்காக, 4 சதவீத இடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், வெளிமாநிலத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோருக்கு, வேலை கிடைத்துள்ளதாக, புகார் எழுந்தது; நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனால், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில், நவ., 7ல் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக, டி.ஆர்.பி., தலைவர், ஜெகனாதன் அறிவித்துள்ளார்.அனைத்து விண்ணப்பதாரர்களின் விடைத்தாள் நகலையும், இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலையும், விடைக்குறிப்புகளையும், தேர்வர்கள் ஆய்வு செய்த நிலையில், பல தேர்வர்களுக்கு, மதிப்பெண்ணில் பெரும் மாறுதல் ஏற்பட்டுள்ளது. பல தேர்வர்களுக்கு, ஏற்கனவே, டி.ஆர்.பி., பட்டியலில் குறிப்பிட்ட மதிப்பெண்ணை விட, 60 மதிப்பெண்கள் வரை அதிகரித்துள்ளது. சில தேர்வர்களுக்கு, 100 மதிப்பெண் வரை குறைவாக வருகிறது. இந்த குளறுபடி எப்படி நடந்தது என, தேர்வர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.ஒரே விடைத்தாளை திருத்தியதில், எப்படி வித்தியாசமான மதிப்பெண் வந்தது; இந்த குளறுபடியை செய்தது யார்; அரசியல் தலையீடு உள்ளதா; தேர்வர்களிடம் லஞ்சம் வாங்கி மதிப்பெண் வழங்கப்பட்டதா என, கல்வியாளர்களும், தேர்வர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.ஏற்கனவே, டி.ஆர்.பி., நடத்திய தேர்வுகள் தொடர்பாக, பல பிரச்னைகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, உச்சபட்ச குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இந்த தேர்வை ரத்து செய்து, புதிதாக மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

கூண்டோடு மாற்றம் வருமா? :

'பாலிடெக்னிக் தேர்வில் ஏற்பட்டுள்ள குளறுபடியால், டி.ஆர்.பி.,யின் மதிப்பீட்டு முறையிலும், தேர்வை நடத்துவதிலும் மாற்றம் செய்ய வேண்டும். ஒரே இடத்தில், பல ஆண்டுகளாக பணி புரியும், டி.ஆர்.பி., அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை, கூண்டோடு மாற்ற வேண்டும். அவர்கள் மீது விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot