ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரதமர் மோடி நாளை (27.07.2017)திறந்து வைக்கிறார். - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 25 July 2017

ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரதமர் மோடி நாளை (27.07.2017)திறந்து வைக்கிறார்.


ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட அப்துல்கலாம் மணிமண்டபத்தை பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) திறந்துவைக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது.
இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல்கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதில், அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் 700-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான 91 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான நாளை (வியாழக்கிழமை) இந்த மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார்.

இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரைக்கு நாளை காலை 10 மணி அளவில் வருகிறார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 11 மணிக்கு மண்டபம் முகாமில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைகிறார். அதன்பின் கார் மூலம் புறப்பட்டு காலை 11.20மணிக்கு அப்துல் கலாம் மணிமண்டபத்துக்கு வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் பிரதமர் தேசிய கொடி ஏற்றுகிறார். பின்பு மணிமண்டபத்தை திறந்துவைக்கிறார்.பிறகு ராமேசுவரத்தில் இருந்து டெல்லி வரை செல்லும் 'அப்துல்கலாம்-2020' என்ற சாதனை பிரசார வாகனத்தை அவர் கொடி அசைத்து தொடங்கிவைக்கிறார். இதையடுத்து, அங்கிருந்து காலை 11.55 மணிக்கு புறப்பட்டு மண்டபம் முகாம் அருகே இந்திய கடலோர காவல்படை குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு வருகிறார். அங்கு ராமேசுவரம்-அயோத்தி இடையேயான புதிய ரெயில் சேவையையும், ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தையும் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மத்திய-மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டபம் முதல் ராமேசுவரம் வரை 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சாலையின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைத்து அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

இதேபோல, ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் வந்து செல்வதற்கான ஏற்பாடுகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம்மேற்கொண்டு வருகிறது. பாம்பன், மண்டபம், ராமேசுவரம் ரெயில் நிலையங்களை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் துணை ராணுவம் தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இந்த ரெயில் நிலையங்களில் பார்சல்கள் அனுப்ப தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து மட்டுமே முழுமையாக மேற்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot